பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தியில் நடைபெறும் புகழ்பெற்ற தேர்த்திருவிழாவின் தேரோட்டம் பக்தர்களின் உற்சாகத்துடன் தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தில் பங்கேற்றனர். பக்தர்களின் பக்தி முழக்கங்களும், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் விழா நடைபெற்ற தேர்வீதிகளை ஆன்மிக உற்சாகத்தில் ஆழ்த்தின.

காசி விஸ்வநாதர் விசாலாட்சி சமேதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெற்ற பின்னர் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். கோவில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விஸ்வநாதர் மற்றும் பார்வதி தேவியின் திருவுருவங்கள் பெரிய தேரிலும், முருகப்பெருமான் மற்றும் விநாயகர் சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட தேர்கள் கோவில் வளாகத்திலிருந்து தேர்வீதிகள் வழியாகப் புறப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் தேர்க்கயிற்றைப் பிடித்து பக்திப் பரவசத்துடன் தேர்களை இழுத்துச் சென்றனர்.
தேர்கள் வீதிகளில் நகர்ந்து சென்றபோது, பக்தர்கள் மலர்கள் தூவி சுவாமியை வரவேற்று வழிபட்டனர். குடும்பம் குடும்பமாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து குழுக்களாகவும் வந்திருந்த பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று இறைவனின் அருளைப் பெற்றனர்.



